ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட காங். கொடிகள், பேனர்கள் திடீர் அகற்றம்

நாகர்கோவில், மார்ச் 2: நாகர்கோவிலில் ராகுல்காந்தியை வரவேற்று வைத்திருந்த பேனர்கள், காங்கிரஸ் கொடிகளை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று காலை கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து திறந்த வேனில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  கோட்டார், செட்டிக்குளம் வழியாக அவர் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு வந்தார். ராகுல்காந்தியை வரவேற்று அவரது கார் வரும் வழிப்பாதைகளில் காங்கிரஸ் கட்சியினர் கொடிகள் கட்டி இருந்தனர். பேனர்களும் வைத்து இருந்தனர்.

நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இந்த கொடிகள், பேனர்களை அகற்றினர். ராகுல்காந்தியை வரவேற்க நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்த சமயத்தில் திடீரென பேனர்கள், கொடிகள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நேற்று முன் தினம் டெரிக் சந்திப்பில் இந்திராகாந்தி சிலையை துணி வைத்து மூடினர். பின்னர் 2 மணி நேரம் கழித்து அதை அகற்றினர். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டது, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அனுமதிக்கப்பட்ட இடத்தில் 100 மீட்டருக்குள் மட்டுமே கொடிகள், பேனர்கள் வைக்க வேண்டும். அனுமதியின்றி எந்த கட்சி சார்பில் கொடிகள், பேனர்கள் வைத்தாலும் அதை அகற்றுவோம் என்றனர்.

Related Stories:

>