வாறுகால் இல்லாததால் சாலையோரம் தேங்கும் கழிவுநீர் சில்லமரத்துப்பட்டியில் சுகாதாரக்கேடு

போடி, மார்ச் 2: போடி அருகே, சில்லமரத்துப்பட்டியில் வாறுகால் இல்லாமல் சாலையோரத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

போடி அருகே தேவாரம் சாலையில் சில்லமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சிலமலை மெயின் ரோட்டில் உள்ள காலனியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த காலனிக்கு கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் ஆங்காங்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி, சில்லமரத்துப்பட்டி கிராம ஊராட்சியிலும், போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் இப்பகுதிமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதிமக்கள் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>