கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு

சிவகங்கை, மார்ச் 2: சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றியவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை கலெக்டர் நிதியின் கீழ் கொரோனா தடுப்பு பிரிவில் கடந்த 7 மாதங்களாக 4 மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 9 பல்நோக்கு உதவி பணியாளர்கள் என மொத்தம் 28 பேர் பணியாற்றி வந்தோம். கலெக்டர் நிதி இல்லாத காரணத்தால் கடந்த 26.02.2021அன்று அனைவரும் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.

மற்ற மாவட்டங்களில் பணியாளர்கள் அனைவருக்கும் மேலும் 3 மாதகாலம் ஒப்பந்த காலத்தை நீட்டித்து பணி வழங்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை. கொரோனா காலத்தில் எங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை மனப்பன்மையுடன் பணியாற்றினோம். ஆனால் பணியில் இருந்து வெளியேற்றியதால் தற்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மற்ற மாவட்டங்களைப்போல் எங்களது பணிக்காலத்தையும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: