மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை, மார்ச் 2: தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்ற அமைப்புகளுடன் செயல்படுகிறது. இதில், 9 மாநகராட்சிகள், 103 நகராட்சிகள், 538 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே பாதாளச் சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. தற்போது காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான நகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பேரூராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.

மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 6 ஆயிரம் வீடுகளில் குளிப்பது, துவைப்பது, சமையல் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றின் இருபுறமும் பெரிய குழாய்கள் மூலம் விடப்படுகிறது. மேலும் கீழப்பசலை கால்வாய், சுப்பன் கால்வாய், முக்கிய ஊரணிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களிலும் இந்த கழிவுநீர் திருப்பி விடப்படுகிறது. மழைநீர் கால்வாயிலும் கழிவுநீர் செல்லும் அவலமும் நடக்கிறது. இவ்வாறு விடப்படும் கழிவுநீர் பெரும்பாலான இடங்களில் கால்வாயை தாண்டி குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நகரில் சேகரமாகும் கழிவுநீரை வெளியேற்றுவது மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடந்தும் நிரந்தரத் தீர்வு காண முடியாமல் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் அரசு பணம் வீணாவதுடன் நிரந்தரமான தீர்வும் ஏற்படவில்லை. எனவே மானாமதுரையில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவர மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர் டேவிட் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்து அதற்கானத் திட்டம் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி 2011ம் ஆண்டு மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து விவரங்களும் சேகரித்து விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

தற்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பாதாள சாக்கடை திட்டம் பற்றி இதுவரை எந்தவித அறிவிப்பும் அரசால் வெளியிட வில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகாவது அமையும் அரசு மானாமதுரை பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும் என்றார்.

Related Stories:

>