சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2:  ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தேடி சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதி தேடி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக தனி தாலுகாவாகவே செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தாமல் காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்திடவும், கூடுதல் மருத்துவ வசதிகளையும் செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இவ்வூரைச் சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக இங்கு தான் வருகின்றனர்.

சுற்றுவட்டார கிராம மக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி இங்கு கிடைக்காததால், திடீர் மரணத்தை தழுவுகின்றனர். மேலும் இங்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வரும் நோயாளிகள் இங்கிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்றார்.

Related Stories: