தேர்தல் நெருங்கி விட்டதால் மகளிர் மன்றங்களை சரிகட்டும் ஆளும் கட்சி

தொண்டி, மார்ச் 2:   சட்டமன்ற தேர்தலையொட்டி தொண்டு நிறுவனம், மகளிர் மன்றங்களை ஆளும் கட்சியினர் போட்டி போட்டு கவனிக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. வழக்கம் போல் அதிமுக சார்பில் பணம் வழங்கும் நடவடிக்கைக்காக கடந்த தேர்தல்களில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே முறையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மகளிர் மன்றங்கள், அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்தன.

வாக்காளர்களுக்கு செல்ல வேண்டிய அனைத்தும் சத்தமில்லாமல் மகளிர் மன்றங்கள் மூலம் போய் சேர்ந்தது. இதையடுத்து தற்போதைய தேர்தலுக்கும் ஆளும் கட்சியினர் மகளிர் மன்றங்கள், தொண்டு நிறுவனங்களின் லிஸ்ட் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளனர். அவர்களை தற்போதே பல வகைகளில் கவனித்து வருகின்றனர். இதில் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்களுத்து தான் கடும் கிராக்கி.

ஒவ்வொரு தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் நூறு முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மன்றங்கள் இருக்கும். தனியாக இயங்கும் மகளிர் மன்றங்களும் உண்டு. கொடுக்க வேண்டிய பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் மன்றங்கள் அனைத்திற்கும் சென்றடையும் என்பதால் பிரச்னை இல்லாமல் போய் விடும்.

திமுக நிர்வாகிகள் கூறியதாவது: தொடர்ந்து அதிமுக 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருப்பதால் அரசு திட்டங்கள் மூலம் மகளிர் மன்றம், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனர். இதை பயன்படுத்தி தற்போது ஆளும் கட்சியினர் தொண்டு நிறுவனத்தினரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். மகளிர் மன்ற நிர்வாகிகள் தொண்டு நிறுவன பணியாளர்களை ஓட்டுக்கு பணம், பரிசு கொடுக்கும் நபர்களாக பயன்படுத்துவதை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: