மதுரைக்கு கூடுதல் அரசு பேருந்துகள் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2:  ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து மதுரைக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியின் முக்கிய தொழில் விவசாயமாகும். தமிழகத்தின் பிற பகுதிகளான மதுரை, விருதுநகர், சிவகாசி, திருச்சி,கரூர், தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து மிளகாய் வத்தலை வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த ஊருக்கு காய்கறிகள், பழங்கள், மருந்து பொருட்கள்,மளிகை பொருட்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் இரும்பு,பெயிண்ட் போன்ற சாமான்களும் மதுரையிலிருந்து தான் பெரும்பாலும் வருகின்றது. ஆனால் மதுரையில் இருந்து ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே வருகின்றது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மதுரைக்கு செல்ல சில பேருந்துகள் மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையால் இங்கிருந்து ராமநாதபுரம், பரமக்குடி வழியாகவும் மற்றும் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை ஆகிய வழியாகவும் சுற்றி மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணம் விரையம் மட்டுமல்லாமல் கால விரயமும் ஏற்படுகிறது.

அவசர தேவைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏற்படும் கால விரையம் மற்றும் பண விரையம் ஆகியவற்றை தடுக்கும் விதமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: