உயிரிழப்பை தவிர்க்க கடலாடிக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு

சாயல்குடி, மார்ச் 2:  கடலாடிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடலாடி தேவர்மகா சபை சார்பாக கோரிக்கை மனு அளித்தனர். கடலாடியில் நடந்த அரசு விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார். அவரிடம் கடலாடி பகுதி பொதுமக்கள் சார்பாக தேவர்மகா சபை தலைவர் ராஜேந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கடலாடியில் தாலுகா தலைமையிட அரசு மருத்துமனை உள்ளது. இதில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை, பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். 30க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி, ராமநாதபுரம் வழியாக நாகப்பட்டிணம், பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இ.சி.ஆர் சாலையில் தினந்தோறும் விபத்துகளும் நடந்து வருகிறது. இதுபோன்று விஷக்கடி, மாரடைப்பு போன்றவற்றிற்கு கடலாடி மருத்துவமனையில் உயரிய சிகிச்சைக்குரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தேவைபடுவோர் மருத்துவர், செவிலியர்களால் முதலுதவி செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரம் செல்வதற்கு கடலாடியில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதனால் வாடகை வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் மேல் சிகிச்சை தேவைப்படுவோர் ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை செல்ல, வெளியூர்களிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பை சந்திக்கும் அவலம் உள்ளது. எனவே கடலாடி தாலுகா தலைமையிட மருத்துவமனைக்கு புதிதாக அரசு 108 ஆம்புலன்ஸ் வசதியை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>