கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் பயங்கர தீ: அதிர்ஷ்டவசமாக 68 பயணிகள் உயிர் தப்பினர்

ரத்லம்: கேரளா – டெல்லி இடையே சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் அதிகாலை திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதீன் நோக்கி 12431 எண் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள விக்ரம்கர் ஆலோட் மற்றும் லுனிரிச்சா ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றது.

அப்போது ரயிலின் பி-1 என்ற ஏசி பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் பீதியடைந்தனர். கோட்டா ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த அந்த பெட்டியில் மொத்தம் 68 பயணிகள் பயணம் செய்தனர். உடனடியாக விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெறும் 15 நிமிடங்களில் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்க, தீப்பிடித்த பெட்டியை ரயிலில் இருந்து தனியாக கழற்றி விட்டனர். முன்னெச்சரிக்கையாக மின்சார விநியோகமும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் தற்காலிகமாக மற்ற பெட்டிகளில் அமர வைக்கப்பட்டனர். ரயிலின் பயணத்தை தொடர ஏதுவாக, கோட்டா ரயில் நிலையத்தில் புதிய பெட்டி ஒன்று இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரத்லம் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் விபத்து நிவாரண ரயில் விரைந்து வந்தனர். இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘உடனடியாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: