தேர்தல் விதிகளை மீறினால் சீல் வைக்கப்படும் விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை தினமும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் கலெக்டர் உத்தரவு

வேலூர், மார்ச் 2: வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது: திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குபவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. திருமண கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் தவிர வேறு எந்த அரசியல் தொடர்பான கூட்டங்களும் நடத்த பதிவு செய்யப்பட்டால் அதன் விவரத்தை முன்கூட்டியே தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தகவல் தெரிவிக்காமல் கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு தெரிந்தால் மண்டபம் சீல் வைக்கப்படும்.

சுப நிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக்கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, வேட்டி சேலை வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப் பட்டால் உடனே தொடர்புடைய தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது கட்சித் தலைவர்களின் பெயர் மற்றும் உருவங்கள் பொறித்த பேனர்கள் பதாகைகள் அலங்கார வகைகள் வைத்து வாக்கு சேகரிக்க கூடாது.விடுதி உரிமையாளர்கள் தேர்தல் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதிகோரும் நபர்களின் அடையாள அட்டை சரிபார்க்க வேண்டும். ஆதார் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். குழுவாக தங்க அனுமதிக்கப்பட்டால், ஆபத்தான ஆயுதங்கள், பட்டாசுகளை வைத்திருக்க அனுமதிக்க கூடாது. அப்படி இருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். லாட்ஜ் மற்றும் மண்டப பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். லாட்ஜ்களில் தங்குபவர் குறித்த விவரங்களை தினமும் அறிக்கையாக கலெக்டருக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து அச்சக உரிமையாளர் பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அச்சக உரிமையாளர்கள் சார்பில் 2 பேர் மட்டுமே வந்திருந்தனர். தேர்தல் விதிகளை மீறி நோட்டீஸ் பேனர் பிளக்ஸ் பேனர்களை அடித்தால் சம்பந்தப்பட்ட கடை திறக்க தடை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.

Related Stories: