ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

வைகுண்டம், மார்ச் 2: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசித்திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதிப்புறப்பாடு நடந்தது. திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை 5மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு தேரில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.15மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி பொன்னி, காரியமாறன் கலைக்காப்பக தலைவர் சடகோப ராமானுஜம், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, வஉசி இளைஞர் பேரவை செயலாளர் கோமதிநாயகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று இரவு 7மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளுதலும், நாளை இரவு 7மணிக்கு சுவாமி நம்மாழ்வார் ஆச்சார்யர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது.

Related Stories: