சாலை, வாறுகால் வசதி கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, மார்ச் 2: சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தரக்கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை செண்பகாநகர் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி செண்பகா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 3, 4 மற்றும் 4வது குறுக்கு தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் வாறுகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை  கண்டித்தும், சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தரக்கோரியும் செண்பகா நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கை மனுவை அளித்து சென்றனர்.

Related Stories: