×

கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வில் 99.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

திருவனந்தபுரம் : கேரளாவில் இவ்வருட 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 99.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளாவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அரசு பொதுக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஷர்மிளா மேரி ஜோசப் முடிவுகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,17,497 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 4,14,290 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 99.07 ஆகும். கடந்த வருடம் 99.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

கடந்த வருடத்தை விட தேர்ச்சி சதவீதம் 0.43 குறைவாகும். 30,514 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ பிளஸ் மதிப்பெண்கள் (90 சதவீதத்திற்கும் மேல்) பெற்றுள்ளனர். கடந்த வருடம் 61,449 மாணவர்கள் ஏ பிளஸ் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.மாணவிகள்தான் அதிக எண்ணிக்கையில் ஏ பிளஸ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

20,771 மாணவிகளும், 9,743 மாணவர்களும் ஏ பிளஸ் மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளனர். 2015 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகள் 767, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 930, தனியார் பள்ளிகள் 408 ஆகும். லட்சத்தீவில் 97.67 சதவீத மாணவர்களும், வளைகுடா நாடுகளில் 100 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.பாலக்காட்டில் 98.29 % மாணவர்கள் தேர்ச்சி: பாலக்காடு: கேரளாவில் 10ம் வகுப்பு தேர்தவு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாலக்காடு மாவட்டத்தில் 98.29 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட இந்தாண்டு 1.06 சதவீதம் குறைவானது.

கடந்தாண்டு 99.35 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 38 ஆயிரத்து 828 மாணவர்கள் 10 வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 38 ஆயிரத்து 164 மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். 19 ஆயிரத்து 188 பேர் மாணவர்களும், 18 ஆயிரத்து 976 பேர் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 1,859 பேர் ஏ பிளஸ் கிரேடு மதிப்பெண்களில் வெற்றிபெற்றுள்ளனர். அதபோல மாவட்டத்தில் 83 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,10th class government general election ,Dr. ,Sharmila Mary Joseph ,Principal Secretary of ,Department of ,Public Education ,of the Government ,
× RELATED காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!!