ஒட்டன்சத்திரம், மே 16: ஒட்டன்சத்திரம் அருகே, டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குட்பட்ட சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஈஸ்வரி (55). இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில், சத்திரப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை வேலப்பர் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஈஸ்வரியை வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்து விட்டு தப்பியோடினர். இது தொடர்பான புகாரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
