கலெக்டர் ஆய்வு தஞ்சையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

தஞ்சை, மார்ச் 2: தஞ்சையில் பாதாள சாக்கடையில் உடைப்பெடுத்து கழிவு நீர் சாலைகளில் ஓடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே உடனே நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் பம்பிங் மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி பொன்நகர் ஏரி வழியாக சீனிவாசபுரம் ரயில்வே கீழ்பாலத்தில் புகுந்து சேப்பநாயக்கன்வாரி அருகே உள்ள புதுஆற்று பாலத்தில் ஓடுகிறது. பிறகு அருகில் உள்ள வடிகாலில் கழிவு நீர் தேங்கி பெரும் நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும் கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிகள் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இக்கழிவு நீரிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் இரவு நேரங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>