சில்லிபாயிண்ட்…

* சவுதி அரேபியாவில் டி20 தொடர் துவக்கம்
ரியாத்: இந்தியாவில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை போன்று சவுதி அரேபியாவிலும் டி20 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தின் 2வது வாரத்தில், புதிதாக அறிமுகமாகும் டி20 தொடரின் போட்டிகள் துவங்க உள்ளன. இப்போட்டிகளில், சர்வதேச டி20 ஜாம்பவான்களும், வளர்ந்து வரும் இளைய தலைமுறை வீரர்களும் இடம்பெறவுள்ளனர். புதிய தொடரில் 6 அணிகள் இடம்பெறும் என்றும், சவுத் ஏஷியன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு போட்டிகளை நடத்தும் உரிமையை சவுதி அரேபியா கிரிக்கெட் கூட்டமைப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* சூப்பர் செஸ் கிளாசிக்ஸ் பிரக்ஞானந்தா டிரா
புகாரெஸ்ட்: ரொமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர் செஸ் கிளாசிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பங்கேற்று ஆடி வருகிறார். முதல் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஜ்ஸா உடன் பிரக்ஞானந்தா மோதினார். போட்டியின் இடையில் சில தவறுகளை செய்த பிரக்ஞானந்தா தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் ஒருவாறாக சமாளித்து ஆடிய அவர் கடைசியில் டிராவில் போட்டியை முடித்தார்.

* நடுவரை வசைபாடிய பொலார்டுக்கு அபராதம்
தர்மசாலா: பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அப்போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரோன் பொலார்ட், 4வது நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோசமான வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தவறுக்காக பொலார்டுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதிக்குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: