×

கார்கேவுடன்- கிரிஷ் சோடங்கர் ஆலோசனை; தமிழக காங்கிரசில் புதிய தலைவரை தேர்வு செய்ய தீவிரம்: வாய்ப்பு கேட்டு மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளார். இதனால் புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநில முதல்வர் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்வை டெல்லி மேலிடம் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ேசாடங்கர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல்காந்தியை அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க மேலிடம் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, மூத்த தலைவர்கள் பலர் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்காக பலர் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படும் சூழ்நிலையில், அந்த பதவியை பெற கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ராஜேஷ் குமார், டாக்டர் செல்லகுமார் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று மூத்த தலைவர்களான திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு போன்றவர்களும் இந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : Kharge- Girish Chodankar ,Tamil Nadu ,Congress ,Delhi ,Chennai ,Congress party ,DMK ,Teva government ,Tamil Nadu… ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை