கலெக்டர் தகவல் குறைதீர்க்கும் கூட்டம் ரத்தால் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்ற மக்கள்

புதுக்கோட்டை, மார்ச் 2: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த குறைதீர் கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை கொடுப்பர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அப்போது அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை மனு அளிக்க பெட்டி வைக்கப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கை மனுக்களை அதில் போட்டு விட்டு செல்லுங்கள் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு பொதுமக்கள் சென்றனர்.

Related Stories: