வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி செய்யப்படும்

புதுக்கோட்டை, மார்ச் 2: புதுக்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவை நடத்தும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை காமராஜபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, போஸ்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் அமையவுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் சாய்தள வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனை பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: