என்கவுண்டரில் இறந்த வாலிபர் உடல் 11 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூர், மார்ச் 2: கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30). இவர் கடந்த 16ம் தேதி இரவு தனது நண்பர்கள் 9 பேருடன் கடலூர் சுப்பராயலு நகர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி வீரா என்கின்ற வீராங்கன் என்பவர் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து பண்ருட்டி புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் உட்பட 5 பேரை பிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை மட்டும் மறுநாள் அதிகாலை மற்ற கொலையாளி இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கிருஷ்ணன் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர் பண்ருட்டி நீதிபதி மணிவர்மன் முன்னிலையில் 18ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்பிறகு கிருஷ்ணனின் உறவினர்கள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணன் உடல் கடந்த 11 நாட்களாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று கிருஷ்ணன் உறவினர்கள் உடலை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து கிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு கிருஷ்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் கிருஷ்ணன் வீடு உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories:

>