வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் “நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும், முன்னோர்களை மனதில் நினைத்து நன்றி சொல்லுவதுதான் முக்கியம். மனபூர்வமாக செய்தாலும் பயன் உண்டு. இருந்த போதிலும், அன்றைய நாளில் எள்ளும் நீரையும் சேர்த்து தர்ப்பணம் கொடுப்பது சாலசிறந்தது.
பித்ரு தர்ப்பணம்
சர்வ அமாவாசை அன்று காலையில் சீக்கிரம் குளித்து, முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்ய வேண்டும். கங்கை போன்ற நதிதீரத்தில் நீத்தார் கடன் கொடுப்பது புண்ணியத்தை கொடுக்கும். இப்போதும் ஸ்ரீ ரங்கம் போன்ற நதிதீரத்தில் ஒட்டி வாழும் மக்கள், காவேரியில் குளித்து நீத்தார்கடன் செய்து வருகிறார்கள். இருந்த போதிலும், குறைந்தது வீட்டில் முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன் செய்ய வேண்டும். வீட்டிலேயே வேத விற்பனர்கள் வழிகாட்டுதலுடன் செய்யலாம்.
பிண்டம் (பிண்ட பிரதானம்)
அரிசி, எள் ஆகியவற்றை சாதத்தில் கலந்து, பிண்டம் தயாரித்து அதனை வேத விற்பனர்களின் வழிகாட்டுதல்களோடு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யலாம். ஆனால், இந்த முறை வழிபாடு, திதி என்று சொல்லக்கூடிய திவசத்தன்று பிண்டம் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த முறை வழிபாடு,அமாவாசை அன்று தேவைப்படாது.
தீபம் ஏற்றுதல்
வீட்டில், முன்னோர்களின் படத்திற்கு முன், விளக்கு ஏற்றி;
“ஓம் பித்ருதேவாய நமஹ”
– என்ற மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.
தானம் மற்றும் அன்னதானம்
சர்வ அமாவாசை அன்று ஏழைகளுக்கு உணவு, உடை ஆகியவைகளை தானமாக கொடுக்கலாம். அதே போல் பசு, காகம், நாய் போன்றவற்றுக்கு உணவு அளிப்பதும் நல்லது.
தவிர்க்க வேண்டியவை
அன்றைய தினத்தில், சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம், போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதே போல், முடி திருத்தம், ஏதேனும் புதிய வேலையின் தொடக்கம், போன்றவை செய்யாமல் இருப்பது நல்லது! மேலும், அன்றைய நாளில் சிலர் நோன்பு இருந்து, மாலையில் உணவு உண்ணுவதும் உண்டு. இப்போது வீட்டிலேயே எளிமையாக சர்வ அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது என்பதனை படிப்படியாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* தண்ணீர் (தேவைக்கு ஏற்ப)
* கருப்பு எள்
* தர்ப்பை (கிடைத்தால் சிறப்பு)
* ஒரு தட்டு அல்லது பாத்திரம்
* சிறிதளவு அரிசி
ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவும். அவரவர் சம்ரதாய திற்கேற்ப தர்ப்பணம் கொடுக்கும் முறை மாறுபடும். இருந்தபோதிலும் இது அடிப்படையாகும்.
செய்யும் நேரம்
அதிகாலை அல்லது காலை 6 – 10 மணிக்குள் செய்வது நல்லது. (இந்த நேரம் சர்வ அமாவாசைக்கு மட்டும் பொருந்தும்)
படிப்படியான முறை
முதலில் குளித்து சுத்தமான உடை அணியுங்கள். அமைதியான இடத்தில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி அமருங்கள்.
தர்ப்பை வைத்தல் (இருந்தால்)
தர்ப்பையை விரலில் (மூன்றாவது விரல்) சுற்றி அணியலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
சங்கல்பம் (மனதில் நினைவு)
உங்கள் தந்தை, தாத்தா, முன்னோர்கள் பெயரை மனதில் நினைத்து “என் முன்னோர்களுக்காக இந்த தர்ப்பணம் செய்கிறேன்” என்று சொல்லுங்கள்.
நீத்தார்கடன் செய்யும் முறை
கையில் தண்ணீர் + எள் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள், அதை மெதுவாக ஒரு தட்டில் மூன்று முறை விடுங்கள். ஒவ்வொரு முறை விடும்போது,
“பித்ருப்யோ நமஹ”
– என்று சொல்லலாம் அல்லது பித்ரு காயத்ரி மந்திரமான
“ஓம் அர்யமணாய வித்மஹே
பித்ரு தேவாய தீமஹி
தன்னோ பித்ரு பிரசோதயாத்’’
– என்று சொல்வதன் மூலமாகவும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறலாம்.
இது எதுவுமே தெரியாத அன்பர்கள், உங்கள் முன்னோர்களை மனதில் நினைத்தாலும் போதும். ஆக, மந்திரம் தெரிந்தாலும் சரி.. தெரியவில்லை என்றாலும் சரி.. நீத்தார் கடன் அவசியம் செய்தே ஆக வேண்டும். அதனை வலியுறுத்தியே இந்த எளிய முறையில் நீத்தார் கடன் செய்வதை கூறியுள்ளோம். மேலும், இங்கு கவனிக்க வேண்டியது, இது எளிய முறை நீத்தார்கடன் செய்ய விரும்பும் அன்பர்களுக்கு மட்டுமே. விரிவாக நீத்தார் கடன் செய்ய விரும்புவோர், வேத விற்பனர்களை வரவழைத்து செய்து கொள்ளலாம். அதே போல், வருடா வருடம் வரக்கூடிய ஸ்ரார்த்தம் அதாவது திவசம் அன்று வேத விற்பனர்கள் மூலமாக செய்வது நல்லது.
