பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கூடுதல் டிஜிபி, கார் டிரைவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்கு

விழுப்புரம், மார்ச் 2:  பெண் எஸ்பி பாலியல் தொந்தரவு புகார் தொடர்பாக, கூடுதல் டிஜிபி, கார் டிரைவருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில், சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு பணியின் போது, மாவட்ட எல்லையை கடந்து சென்ற, ராஜேஷ்தாசை, பெண் எஸ்பி ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அவரை காரில் ஏறச் சொன்ன சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து அந்தப் பெண் தமிழக சட்டம், ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பிக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் குரல் கொடுத்தனர்.

 தமிழக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பெண் எஸ்பிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்து வந்த சிறப்பு டிஜிபி (சட்டம், ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டது. கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். பாலியல் புகார் குறித்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும், விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்பி கோமதியை நியமித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். சம்பவம் நடைபெற்றது விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், விழுப்புரம் சிபிசிஐடி காவல்நிலையத்தில், ராஜேஷ்தாஸ் மீது, பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பெண் எஸ்பியின் காரை மறித்த, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும், விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

 இந்நிலையில், நேற்று பிற்பகல், இவ்வழக்கின் அதிகாரியான கூடுதல் எஸ்பி கோமதி மாற்றப்பட்டு, முத்தரசி எஸ்பி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கினால், விசாரணை அதிகாரி அவசர, அவசரமாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நேற்று இவ்வழக்கில் விசாரணை பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே, கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ், காரை ஓட்டிச் சென்ற டிரைவர், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோருக்கு தனித்தனியே சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  குறிப்பாக, கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு, கார் ஓட்டிச் சென்ற டிரைவரிடம் நடத்தும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. காரை ஓட்டிச் சென்ற போது, காருக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்த ஒரேநபர் அவர்தான். இருப்பினும், அவர் உயர்அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதனால் காருக்குள் நடந்த உண்மை சம்பவங்களை, சிபிசிஐடி போலீசாரிடம் மறைக்காமல் கூறுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.   மேலும், பெண் எஸ்பி காரில் ஏறும் போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் காரிலிருந்து இறங்கும் போது, நின்றிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

சுங்கச்சாவடியில் வீடியோ ஆதாரம் கடந்த 22ம்தேதி, ராஜேஷ்தாசின் கார் சென்னை மார்க்கமாகத்தான் சென்று கொண்டிருந்ததாம். எப்படியும், அவர் பிடியிலிருந்து தப்பித்தாக வேண்டும் என்ற முனைப்பில் வந்த, பெண் எஸ்பி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில், மெதுவாகச் சென்ற போது கார்கதவினை திறந்து வேகமாக வெளியேறியுள்ளாராம். இந்தக்காட்சிகள் அனைத்தும், சுங்கச்சாவடியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக்காட்சிகளை கைப்பற்றியும், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்ததிட்டமிட்டுள்ளனர்.

சிபிஐ விசாரித்தால் தான் நீதி கிடைக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், சிபிசிஐடி போலீசார், மாநில அரசின், காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறார்கள். இவர்கள் விசாரணை நடத்தினால், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு உரிய நீதி கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் அதே காவல்துறையில் உயர்பொறுப்பில் இருக்கக்கூடியவர். அவர், எப்படி வேண்டுமானாலும் இந்த வழக்கை மாற்றமுடியும். மேலும், அவரது மனைவியும், அரசு செயலர் அந்தஸ்தில் இருப்பதால், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உரிய நீதி கிடைக்கும். காவல்துறையில் நடக்கும் லாக்கப் மரணம் போன்ற வழக்கிலே, காவல்துறைக்கு ஆதரவாக விசாரணையும், நடவடிக்கைகளும் இருக்கிறது. உயர் அதிகாரிகள், குற்றச்சாட்டில் சிபிசிஐடி போலீசார் எப்படி செயல்பட முடியும் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை தேவை என்றார்.

 

Related Stories:

>