×

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்;பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உரிமையாளர் கைது

தேவாஸ்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியானதோடு 23 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் டோங்க் காலன் பகுதியில் அனில் மாளவியா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு கடந்த 2023ம் ஆண்டு உரிமம் வழங்கப்பட்டு, பின்னர் 2024ம் ஆண்டு மே 6ம் தேதி புதுப்பிக்கப்பட்டது. சுமார் 15 நாட்களுக்கு முன்புதான் இங்குச் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று ஆலையில் பயங்கர வெடிவிபத்து நடந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 25 பேர் தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் அனில் மாளவியாவை போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரது உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விபத்தில் காயமடைந்து இந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மோகன் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், ‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடப்பட மாட்டார்கள். இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும்’ என்று கூறினார்.

இந்த விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகளின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் ஜிட்டு பட்வாரி, ‘இந்த ஆலை உரிமையாளருக்கு ஆளும் பாஜக பிரமுகர்களின் ஆதரவு உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Tags : Madhya Pradesh ,Dewas ,Anil Malviya ,Tonk Kalan ,Madhya Pradesh.… ,
× RELATED “வாகனம் இல்லா வெள்ளிக்கிழமை”...