×

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நெகிழ்ச்சி

புதுச்சேரி, மார்ச் 2: நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நீரிழிவு, இருதய பாதிப்பு உள்பட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி நேற்று காலை கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தினார். கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோசம்மா அவருக்கு உதவி செய்தார். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு புதுச்சேரி செவிலியர் நிவேதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். இன்று (நேற்று) இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வருகிறார் என காலையில் தான் செய்தி அறிந்தேன். தடுப்பூசி மையத்தில் எனக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக நான் தான் பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அழைக்கப்பட்டேன்.

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பெறுவதில் உள்ள தயக்கத்தை நீக்குவதற்காக பிரதமர் மோடி கோவாக்சின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார். 28 நாட்களில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்வார்.  பிரதமர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தபோது எல்லோருக்கும் வணக்கம் கூறி எங்கிருந்து வந்துள்ளீர்கள் என்று விசாரித்தார்.  நான் புதுச்சேரி என்றதும் வணக்கம் கூறி தமிழில் பேச முயற்சி செய்தார். அதன்பிறகு, அரசியல்வாதிகளுக்கு தோல் மிகவும் அழுத்தமாக இருக்கும். அதனால் பெரிய ஊசி கொண்டு வந்து போடுங்கள் என்றார். அதற்கு நாங்கள் எல்லாம் சிரித்தோம். நான் தடுப்பூசி போட்டது கூட பிரதமருக்கு தெரியவில்லை. வலியே தெரியவில்லை என்று ஆச்சரியப்பட்டார். தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடம் தனிமையில் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தோம். அதன்பிறகு நன்றி கூறிவிட்டு கிளம்பி சென்றார். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...