×

முட்டை கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

திருப்பூர், மார்ச் 2: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பல்வேறு தேர்தல் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கள்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், ஒரு சில பொதுமக்கள் நேற்று மனு போட்டனர்.
திருப்பூர், ஊத்துக்குளி அடுத்த புஞ்சைதளவாய்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: இப்பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளது. மேலும், ஏராளமான கால்நடைகளும் உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் கால்நடைகள் நம்பி தான் வாழ்வாதாராம் செய்து வருகின்றனர். இத்தகைய, சூழ்நிலையில், அருகில் புதியதாக முட்டை கோழிப்பண்ணை அமையவுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும். ஈக்களின் தொல்லை அதிகரித்து மிகுந்த சுகாதார சீர்கேடு உண்டாகும். இதனால், பொதுமக்கள் பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்படக்கூடும். எனவே, கலெக்டர் இதன் மீது கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், குன்னத்தூர் அடுத்த சித்தாண்டிப்பாளையத்தில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை எண்:3990, அருகில் பழமையான அம்மன் கோவில், ரேசன் கடை, இ-சேவை மையம் உள்ளது. மேலும், அருகில் பல குடியிருப்புகளும் உள்ளது. இவ்வழியாக பள்ளி மாணவர்கள், பெண்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால், அவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இதன் மீது நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...