மதம் சார்ந்த பிளக்சில் அரசியல் தலைவர்களின் புகைப்படத்தை அனுமதிக்க கூடாது

திருப்பூர். மார்ச். 2: மதம் சார்ந்த பிளக்ஸ் வைக்கும் போது அரசியல் தலைவர்கள் புகைப்படம் பயன்படுத்தக்கூடாது என அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலெக்டரிடம் நேற்று வலியுறுத்தினார்கள்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றுவது தொடர்பான அங்கீகிர்க்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு பொது நடத்தை விதிகளான எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதி, இனம்,மதம்,மொழி ஆகியவைக்கிடையில் வெறுப்பை தூண்டுகிற அல்லது அதிகப்படுத்துகிற செயலில் ஈடுபடக் கூடாது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியின் தலைவர்கள் தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ விமர்சிக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நேரத்தில் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா நோய் தொற்று காலம் உள்ளதால் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் போது 5 நபர்கள் மட்டும் செல்ல வேண்டும். பொது பிரசாரம் செய்யும் போது முககவசம் அணிய வேண்டும். மேலும், பொது கூட்டத்தில் சமூக இடைவெளி மற்றும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மூன்று வாகனங்கள் மட்டும் அனுமதிக்க தேர்தல் ஆணையம் தெரிவத்துள்ளது. இந்த விதிமுறைகளையும் அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதில், அரசியல் கட்சியினர் பேசியதாவது: முன்னாள் சி.பி.ஐ தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு நாங்கள் சிறிது அளவு பிளக்ஸ் வைத்திருந்தோம்.அவற்றை போலீசார் வலுக்கட்டாயமாக கிழித்தனர். ஆனால், அதிமுகவினர் பெரிய அளவில் பிளக்ஸ் வைத்திருந்தனர். அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு, ஒரு தலைப்பட்சமாக போலீசார் நடந்து கொள்ளக்கூடாது. மேலும், பறக்கும் படையினர் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வர வேண்டும். தேர்தல் அதிகாரிகளது எண் கொடுக்கும் போது சரியான எண்ணாக இருக்க வேண்டும். ஒருவருக்கு அழைத்தால் வேறு ஒருவருக்கு அழையுங்கள் என மாறி கூறக்கூடாது. மதம், கோவில் சார்ந்த பிளக்ஸ் வைக்கும் பொழுதும் எந்த கட்சியினரும் அவர்களது சின்னம் அல்லது தலைவர்கள் புகைப்படம் பதிந்து வைக்ககூடாது.

ஆன்லைனில் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். வாக்களிக்கும் பொழுது கட்சி வேஷ்டிகள் கட்டி செல்ல தேர்தல் நடைமுறைகளில் அனுமதி உள்ளது. அவற்றை பரீசிலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசியல் கட்சியினர் பேசினர்.  பின்னர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 381 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: