கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைக்க குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

மஞ்சூர், மார்ச் 2:  தங்க நகைகளை அடமானம் வைக்க கூட்டுறவு வங்கியில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் 6 சவரன் வரை அடகு வைத்த நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த 26ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில்மஞ்சூர் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நேற்று நுாற்றுக்கணக்கானோர் தங்களது தங்க நகைகளை அடமானம் வைக்க குவிந்தனர். நகைகளை அடகு வைத்த அனைவரும் தங்களது நகை கடன்களும் தள்ளுபடியாகும் என்ற பலத்த எதிர்பார்பில் அடமானம் வைத்தனர். இதில் பலர் வீடுகளில் வைத்துள்ள நகைகள் மற்றும் பலர் பைனான்ஸ், தனியார் நிதி நிறுவனங்களில் வைத்த நகைகளையும் மீட்டு கூட்டுறவு வங்கியில் கொண்டு வந்து அடகு வைத்தது குறிப்பிடத்தக்கது. தள்ளுபடி எதிர்பார்ப்பில் நேற்று காலை முதலே மஞ்சூர் கூட்டுறவு வங்கியில் இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் வங்கி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: