தேர்தல் விதிமுறை மீறல் ரூ.20 லட்சம் பறிமுதல்

ஊட்டி, மார்ச் 2:  நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்துச் சென்றதாக 2 நாட்களில் ரூ.20 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.   சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் நிலையில், தேர்தலில் விதிமுறைகளை மீறி பணம் எடுத்துச் செல்பவர்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குபவர்களை பிடிக்க நீலகிரி மாவட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறி பணம் எடுத்து செல்பவர்களை தடுக்க, பரிசுப் பொருட்களை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மொத்தம் 30 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 பறக்கும் படை, 9 நிலைக் குழு, 3 வீடியோ குழுக்கள், 3 வீடியோ தணிக்கை குழுக்கள், மூன்று தணிக்கை குழுக்கள், மூன்று நன்னடத்தை விதிமீறல் கண்காணிப்புக்குழு என மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களில் இரண்டு பேரிடம் இருந்து தேர்தல் நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக பணம் எடுத்துச் சென்றதாக ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 பறிமுதல் செய்துள்ளனர். ரூ.3.30 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி யாரேனும் பணம் கொடுத்தாலோ அல்லது பரிசுப் பொருளை கொடுத்தால் ‘சி விஜில் செயலி’ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Related Stories:

>