முதல்வர் அளித்த ₹22 லட்சத்தை வழங்காததால் கூட்டுறவு வங்கியை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை இடைப்பாடி அருகே பரபரப்பு

இடைப்பாடி, மார்ச் 2: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முதல்வர் வழங்கிய ₹22 லட்சத்திற்கான கடனை, ஒருமாதமாகியும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தராமல் காலம் தாழ்த்தியதால், ஆத்திரமடைந்த பெண்கள் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடைப்பாடி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சென்னையில் பிப்ரவரி 2ம் தேதி ₹22 லட்சத்திற்கான காசோலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால், கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடனை வழங்காமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், 26ம் தேதி மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்து, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

நேற்று மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளரிடம் கடன் வழங்க காசோலை வழங்கியும், இதுவரை கடன் தொகை வழங்கவில்லை. கடன் தொகையை வழங்கியிருந்தால், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ஆகியிருக்கும் எனக்கூறி கூட்டுறவு செயலாளர் மோகனிடமும், வட்டார மகளிர் குழு தலைவியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மோகனிடம் கேட்ட போது, ‘14 மகளிர் குழுக்களுக்கும் தனித்தனியாக காசோலை வழங்காமல், மொத்தமாக ஒரே காசோலையாக ₹22 லட்சம் கொடுத்ததால், நிர்வாக காரணங்களால் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சில நாட்களுக்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Related Stories: