வைகுந்தம் ஏரியில் மண் வெட்டி கடத்திய பொக்லைன், லாரி பறிமுதல்

இளம்பிள்ளை, மார்ச் 2:மகுடஞ்சாவடி ஒன்றியம், வைகுந்தம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமுட்டி செல்லியம்மன் கோயில் பகுதியில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஏரியில் மண் வெட்டியும், அதிலிருந்த மரங்களை வெட்டி கடத்தியும் வந்தனர். நேற்றும் இதேபோல் ஏரியில் மண் அள்ள வந்தபோது, பொதுமக்கள் அதை தடுத்து நிறுத்தி வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி பச்சமுத்து, சங்ககிரி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆளும் கட்சியினர் ஊராட்சி தலைவரின் ஒத்துழைப்புடன் இந்த ஏரியில் இரவு, பகல் பாராமல் மண் மற்றும் மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>