விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை,மார்ச் 2: ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக கோவை மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் இருந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் கொண்டு வந்த கைப்பையில் ஒரு கிலோ எடையுள்ள தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது பெயர் பாலு என்பதும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலு கடந்த மாதம் வேலைக்காக துபாய் சென்று உள்ளார். அங்கு பணி எதுவும் கிடைக்காததால் மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார். அப்போது அவரிடம் சிலர் தங்கத்தை கொண்டு செல்லும்படியும், இதற்கு பணம் தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. எனவே பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் தங்கத்தை கொண்டு வந்துள்ளார். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.47 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்’’ என்றனர்.

Related Stories: