கோனியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

கோவை, மார்ச் 2: கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் நாளை மதியம் 2 மணியளவில் நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 15-ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா துவங்கியது. பின்னர்,  23-ம் தேதி கொடியேற்றம், அக்னி சாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீருற்றி வழிபட்டனர். திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளையானை வாகன திருவீதி உலா நடந்தது. இன்று (2-ம் தேதி) மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையடுத்து, நாளை முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது. அதன்படி, ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்த்திருவிழா நடக்கிறது.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தேர் வடம் பிடித்து ேதரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். தேரோட்டத்தையொட்டி நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி மற்றும் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர்.  போக்குவரத்து மாற்றம்: கோனியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி நாளை(3-ம் தேதி) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ், ரயில்வே மேம்பாலம், கிளாசிக் டவர் வழியாக செல்ல வேண்டும். அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதியிலிருந்து வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் வழியாக பேரூர் செல்ல வேண்டும். பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலிவன் வீதி வழியாக கார்திபார்க் அடைந்து நகருக்குள் வர வேண்டும். மேலும், ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி வீதி ஆகிய சாலைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>