தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்காவிட்டால் ‘பறிமுதல்’

ஓமலூர், மார்ச் 2:ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்தில் ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய பகுதிகளில் துப்பாக்கி பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி ஓமலூர் காவல் நிலையத்தில் 49 துப்பாக்கிகளில், 28ம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் 54 துப்பாக்கிகளில் 15ம், தாரமங்கலம் காவல் நிலையத்தில் 24 துப்பாக்கிகளில் 6 துப்பாக்கியும் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், தொளசம்பட்டி, ஜலகண்டாபுரம் நங்கவள்ளி ஆகிய காவல் நிலைய எல்லையில் பயன்படுத்தப்படும் 100 துப்பாக்கிகளில் 20 துப்பாக்கிகளே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள துப்பாக்கிகளை பெறாமல் போலீசார் மெத்தனமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் அறிவித்ததும் துப்பாக்கி வைத்துள்ள அனைவரும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இதுவரை துப்பாக்கிகள் ஒப்படைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

Related Stories: