- TDP அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டசபை
- திமுக
- சென்னை
- தெலுங்கு தேசம்
- விஜய்
- அரசு
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக தலைவர் விஜய் மீதான அரசு 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. தீர்மானத்துக்கு எதிராக 22 பேரும், நடுநிலையாக 5 பேரும் வாக்களித்தனர். திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் மற்றும் தேமுதிகவின் ஒரு உறுப்பினர் என 60 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். திமுக கூட்டணி கட்சிகள் கொடுத்த ஆதரவின் அடிப்படையில் விஜய் 4வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் அனுமதி அளித்ததுடன், 13ம் தேதிக்குள் (நேற்று) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வராக பதவியேற்றார். 9 அமைச்சர்களும் அன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, அதிமுகவில் வேலுமணி தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு அணி, தவெக ஆட்சி தொடர ஆதரவு தெரிவித்தது.
இதற்கு பதிலாக அவர்களுக்கு அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, முதல்வர் விஜய் தலைைமயிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), வன்னியரசு (விசிக), மாரிமுத்து (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), ஷாஜகான் (ஐயுஎம்எல்), காமராஜ் (அமமுக) தீர்மானத்தை ஆதரித்து பேசினர். பிரமேலதா (தேமுதிக), தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக பேரவை), ஜவஹருல்லா (மமக), நித்தியானந்தன் (கொமதேக) ஆகியோர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்ப்பதாக பேசினர். சவுமியா (பாமக), போஜராஜன் (பாஜ) தீர்மானத்துக்கு நடுநிலை வகிப்பதாக கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி, இந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் 25 எம்எல்ஏக்களுடன் தனித்து செயல்படும் வேலுமணி தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காது என்று கூறியதுடன், தவெக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அவர்களுக்கு ஆதரவாக தேமுதிக உறுப்பினர் பிரேமலதாவும் வெளிநடப்பு செய்தார்.
இதைத்தொடர்ந்து விஜய் பேசும்போது, ‘தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பேசி உள்ளனர். நிச்சயமாக இந்த அரசு மதசார்பற்ற அரசாக செயல்படும். முந்தய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டம் தொடரும். குதிரை பேரம் நடத்தும் அரசு அல்ல, குதிரை வேகத்தில் செல்லும் அரசாக செயல்படும்,’ என்றார். அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரர், ‘குரல் வாக்கெடுப்பு அல்லது எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு என்று 2 முறையில் வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால் இது முக்கியமான வாக்கெடுப்பு என்பதால் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பேரவை செயலாளர் 3 முறை அழைப்பு மணியை அழுத்துவார். அதன்பிறகு பேரவைக்குள் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்தும் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து 3 முறை மணியோசை ஒலிக்கப்பட்டது. சட்டப்பேரவையின் நுழைவாயில் கதவுகள் அனைத்தும் மூட சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர், முதல்வர் விஜய்யின் ஆட்சியை ஆதரிக்கும் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என தனி தனியே எழுந்த நிற்க சொல்லி அதனை கணக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 6 பகுதியாக எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் ஆதரிப்பவர்கள் முதலில் எழுந்திருக்கும்படி கூறினார். அவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்ட பின்னர் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் எழுந்து நின்றனர். தொடர்ந்து நடுநிலை வகிப்பவர்கள் எழுந்து நின்றனர். அதன்படி 6 பகுதியிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகளும், தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், நடுநிலை வகிப்பதாக 5 வாக்குகளும் விழுந்தன. அதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். அப்போது தவெக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர். தவெக அரசு வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் பேசினார்.
பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் செங்கோட்டையன் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்து கடிதம் அனுப்பி வைப்பார்.
