ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

ஈரோடு, மார்ச் 2:  ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான 24 வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் வீடியோ பதிவு மூலம் கண்காணிப்பு செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான இளங்கோவன் தெரிவித்துள்ளார்.    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி, அத்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து 10ஆயிரத்து 939 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 987 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,26,941 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், 83 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 320 ஆக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சாரம், அடிப்படை வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்கள் கூட்ட நெரிசலின்றி வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வளையக்கார வீதி, குமலன்குட்டை, பி.பெ.அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் உள்ள 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது.

இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை உள்ள இடங்களான வளையக்கார வீதி, குமலன்குட்டை, பி.பெ.அக்ரஹாரம் போன்ற பகுதியில் 24 வாக்குச்சவாடிகள் பதற்றமானவையாக உள்ளன. அங்கு சி.சி.டி.வி.கேமரா மற்றும் வீடியோ பதிவு மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், 320 வாக்குச்சாவடிகளை 21 மண்டலங்களாக பிரித்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: