தேர்தல் விதிமுறை அமல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் ரத்து

ஈரோடு, மார்ச் 2: தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதையொட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பெட்டி வைக்கப்பட்டுள்ளது.    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டம், கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ.,க்கள் நடத்தும் மனு நீதி நாள் முகாம், வேளாண் குறைதீர் கூட்டம் போன்றவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெற்ற பின்னரே, மீண்டும், இக்கூட்டங்கள் நடத்தப்படும். இருப்பினும், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் மனுக்கள் அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை, குறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படுகிறது. அங்கு, துணை தாசில்தார் நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, மனுக்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, பெட்டியில் மனுக்களை போட்டு செல்லும்படி கூறுகின்றனர். இங்கு போடப்படும் மனுக்கள், அன்றன்று எடுக்கப்பட்டு, தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, தீர்வு காணப்படும், என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: