கொங்கனகிரி மலைக்கோயில் நிலத்தை கல் குவாரியினர் ஆக்கிரமிப்பு

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு மாவட்டம் கொங்கனகிரி மலைக்கோயில் நிலத்தை கல் குவாரியினர் ஆக்கிரமித்துள்ளதாகவும், வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கொங்கர்பாளையம் பஞ்சாயத்து கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாதேஸ்வரன் என்பவர் தலைமையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  கவுண்டம்பாளையம் கிராமத்தில் கொங்கனகிரி குமாரசாமி சுவாமிகள் என்ற பழமையான மலைக்கோயில் உள்ளது. இது, முருகன் கோயிலாகும். பழங்கால அரசர்கள் மூலம் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் பராமரிப்புடன் உள்ளன. அதில் மலைக்குன்று பகுதியில் உள்ள 30 ஏக்கர் நிலம், நில வரையறை செய்யப்படாமல் உள்ளது. கோயில் நிலத்தை, அங்குள்ள கல் குவாரி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்து செல்கின்றனர்.  இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதற்கு, வருவாய் துறை மற்றும் பிற துறையினர் உடந்தையாக உள்ளனர். கோயில் நில பாறைகளை வெட்டி எடுக்க, பயங்கர வெடிகளை வைப்பதால், கோயில் சுவர், கோபுரங்கள் விரிசல் விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நிலஅளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ளவர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: