தனியார் பார், விடுதிகளில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றா விட்டால் கடும் நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து நேற்று மாலை ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ.,வுமான சைபுதீன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, தனியார் பார்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஆர்.டி.ஓ.,சைபுதீன் பேசுகையில் கூறியதாவது: திருமண மண்டபங்களில் ஏற்கனவே பதிவு செய்த திருமணங்களை நடத்தி கொள்ள தடையில்லை. புதிதாக திருமணம், காது குத்து விழா என வருவோருக்கு அனுமதி அளிக்க கூடாது. அப்படி விழா நடத்த வந்தால் மண்பட உரிமையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மண்டபத்தில் கறி, கிடா விருந்து, பண பரிவர்த்தனைகள் தேர்தல் முடியும் வரை நடக்க அனுமதியில்லை.

அனுமதித்தால் மண்டபம் பூட்டி சீல் வைக்கப்படும். தங்கும் விடுதிக்கு (லாட்ஜ்) வருவோரிடம் உரிய அடையாள அட்டையை வாங்கி பார்த்து விசாரித்து அறை கொடுக்க வேண்டும். 10 அறைகள், 20 அறைகள் மொத்தமாக முன்பதிவு செய்ய யாரேனும் வந்தால், உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கூட்டம், கூட்டமாக யாராவது தங்கி இருந்தாலோ, வெளி மாநில, வெளி மாவட்ட நபர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பரிசு பொருட்கள், துணி வகைகளை விடுதியில் மொத்தமாக வைத்திருக்க அனுமதியில்லை. தங்கும் வசதியுடன் கூடிய நட்சத்திர பார்கள், உணவகத்துடன் கூடிய நட்சத்திர பார்கள் நேர கட்டுப்பாட்டை சரிவர பின்பற்ற வேண்டும். நட்சத்திர பார்களின் தினசரி விற்பனை விபர பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.  டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே விற்பனை தொடர வேண்டும். போஸ்டர், பேனர், நோட்டீஸ் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் அதில் தங்கள் போன் நம்பர், அச்சகத்தின் பெயரையும் அச்சிட வேண்டும். தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>