செயின் பறிப்பு ஈடுபட்ட வாலிபர் கைது: 6 பவுன் நகை மீட்பு

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடம் கடந்த சில மாதங்களாக மர்மநபர்கள் செயின் பறிப்பு, செல்போன் மற்றும் உடமைகளையும் திருடி வந்தனர். இதில், கடந்த 26ம் தேதி நிஜாமபாத்-கோவை செல்லும் ரயில் ஈரோட்டில் நின்றபோது, ஒரு மர்மநபர் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை பார்த்தபோது, 20வயது மதிக்கத்தக்க நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் சுற்றித்திரிந்தார். இதையடுத்து அந்த நபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கடந்த 26ம் தேதி ரயில் பயணியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த சேதுராமன் மகன் பத்ரி என்ற ராஜசேகர் (20) என்பதும், செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், ராஜசேகர் ரயில் பயணிகளிடம் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.  ராஜசேகரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து, ஈரோடு ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 6பவுன் நகை யைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: