புதுடெல்லி: இந்தியாவில் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாத காரணத்தால் 3 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்க முடியாமல் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, மக்கள் தனியார் வாகனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி ஐதராபாத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைக் காக்க மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் எரிபொருள் சிக்கனத்திற்காக சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற பணியாளர்கள் மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையைப் பின்பற்றலாம் என்றும் யோசனை வழங்கினார். பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தும் நிலையில், சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின்படி, கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1.65 கோடி பயணிகள் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாததால் பயணிக்க முடியாத நிலை இருந்தது.
ஆனால், தற்போது 2025-26ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து 3.39 கோடி பயணிகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தினசரி சராசரியாக 92,877 பயணிகள் அதாவது ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பயணி தனது பயண வாய்ப்பை இழக்கின்றனர். இதில் அதிகபட்சமாக ஸ்லீப்பர் வகுப்பில் 1.68 கோடி பயணிகளும், ஏசி 3 டயரில் 74.55 லட்சம் பயணிகளும், ஏசி 2 டயரில் 24 லட்சம் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதற்கும், போதிய வசதிகள் இல்லாததற்கும் இடையிலான இடைவெளியையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ரயில்வே துறையில் நிலவும் இந்த பிரச்னையை சமாளிக்க, கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரயில்ஒன்’ செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒரு டிக்கெட் உறுதி செய்யப்பட 94 சதவீத வாய்ப்புள்ளதா என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறுகிறது. இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க ரயிலைப் பயன்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தாலும், நடைமுறையில் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அல்லாடும் சூழலே நிலவுவதாக ரயில்வே துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
