மாவட்டத்தில் 323 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை நாளைக்குள்(3ம் தேதி) காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய தொழிலதிபர்கள், முன்னாள் ராணுவத்தினர் தங்களது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை துப்பாக்கிகள் எடுத்துச் செல்ல தடையாணை அமலுக்கு வந்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 323 துப்பாக்கி உரிமைதாரர்கள் மற்றும் உரிமம் காலாவதியாகி புதுப்பிக்க தவறியவர்களும் தங்களின் பொறுப்பில் வைத்துள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்களை நாளைக்குள்(3ம் தேதி) தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பாதுகாப்பு நிமித்தம் ஒப்படைத்து, அதற்கான உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் தினத்திலிருந்து ஒரு வார காலத்திற்கு, தமது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories:

>