சட்டமன்ற தேர்தலுக்காக 9,959 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 9,959 மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் செய்யப்பட்டு தயார் நிலையில்  உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  வாக்குச்சீட்டு பதிவு இயந்திரம் 4,006, வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு  இயந்திரம் 2,853 மற்றும் வாக்காளர் பதிவு சரிபார்க்கும் இயந்திரம் 3,100 என  மொத்தம் 9,959 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை  சரிபார்க்கும் பணிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில்  ஏற்கனவே இருந்த 1,863 வாக்கு சாவடிகளுடன் கொரோனா நோய் தொற்று பரவாமல்  இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 435 துணை வாக்குச்சாவடிகள் கூடுதலாக  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் மொத்தம் 2,298  வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் 187  வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 99 வாக்குச்சாவடிகள் மிகவும்  பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு  கேமரா பொருத்தப்பட்டும், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வாக்கு சாவடிகளில் 50 சதவீத வாக்கு  சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

Related Stories:

>