×

ஊதிய உயர்வு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி நகராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி, தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் இருந்து தினசரி 32டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் தடங்கம் ஊராட்சியில் கொட்டப்படுகிறது. நகராட்சியில் 90 தற்காலிக ஊழியர்கள் உள்பட 220 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்களுக்கு தினசரி ஊதியமாக ₹339 தரப்படுகிறது. தங்களுக்கு ₹509 ஊதியம் வழங்க வேண்டும், அம்மா உணவகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், நகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினருடன் இணைந்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை 6 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் (பொ) பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தூய்மை பணிக்கு யாரும் செல்லவில்லை. இதனால் வார்டுகளில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கியது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், ‘எங்களுடைய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.  நேற்று இரவு வரை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா