சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தவெக வேட்பாளர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், எதிர் மனுதாரரான தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தமிழக சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட எந்த வாக்கெடுப்பிலும் மறு உத்தரவு வரும்வரை கலந்துகொள்ள தடை விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த உத்தரவு அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்துள்ளதாக கருத கூடாது. தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி ஆகியோர் திருப்பத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பான ஆவணங்களை உடனடியாக கைப்பற்றி சீல் வைத்து பாதுகாக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை ஆவணங்கள், வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட சீட்டுகள், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்கு விவரங்கள், செல்லாத வாக்குகளின் விவரங்கள், வாக்கு எண்ணிக்கையை மறு ஆய்வு செய்த ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் இருந்தால் அவற்றை தனியாக வைக்க வேண்டும். அந்த வாக்குகளை திறக்கவோ, கலைக்கவோ கூடாது.
இந்த வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர், சீனிவாச சேதிபதி ஆகியோர் ஜூன் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து த.வெ.க வேட்பாளர் சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதே போன்று பெரிய கருப்பன் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு மனுக்களும் அவசர வழக்காக இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
