பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன்  மாளிகையில் நடந்தது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட  தேர்தல் அலுவலர்கள் பி.என்.ஸ்ரீதர், மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஷ், ஆகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பெர்மி வித்யா, தேர்தல்  நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,  தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து திமுக சார்பில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம் கவி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக 28ம் தேதி காலை 11 மணிக்கு புகார் அளித்தோம். ஆனால்  பறக்கும் படையினர் மாலை 4 மணிக்கு தான் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். எனவே, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தியுள்ளோம்.

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும். தேர்தல் காலத்தில் அரசால்  அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், சொந்த வீடுகளில் விளம்பரம் வைக்க அனுமதி உள்ளதா என்பது தொடர்பாகவும்  விளக்கங்களை கேட்டுள்ளோம். இன்று (நேற்று) மாலை விரிவான அறிவுறுத்தல்களை வழங்குவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.  முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிப்பது தொடர்பாகவும் விளக்கங்களை கோரியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: