தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை வீடியோவில் பதிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 1: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது நடைமுறையில் உள்ளது. விதிமீறல்களை கண்காணிக்க, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் சுழற்சி முறையில் பணியாற்ற 24 பறக்கும் படைகள், 24 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றியக்குழு தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, பறக்கும் படையினர் பயன்படுத்த ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கார், வேன், சந்தேககத்துக்குரிய இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். அவ்வாறு சோதனை செய்யப்படும் நிகழ்வுகள் அனைத்தையும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வீடியோவில் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அதோடு, பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருவாய்த் துறையினரின் நேரடி மேற்பார்வையில், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் தாமாக முன்வந்து, தங்களுடைய சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பணம், பரிசுப் பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வீடியோ பதிவுடன் சோதனையில் ஈடுபட்டனர். அடுத்தபடம்: வேங்கிக்கால் பகுதியில் பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை 2வது நாளாக அழிக்கும் பணி நடந்தது.

Related Stories: