கேன் வாட்டர் தட்டுப்பாடு ஆலையை முற்றுகையிட்ட முகவர்கள்

கடலூர், மார்ச் 1:  கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக அடைக்கப்பட்ட குடிநீர் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தட்டுப்பாட்டின் காரணமாக கேன் வாட்டர் முகவர்கள் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் அடைக்கப்பட்ட குடிநீர் (கேன் வாட்டர்) தயாரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 28 அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேன் வாட்டர் தயாரிப்பு ஆலைகளின் சம்பந்தப்பட்ட சங்கத்தினர், நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கேன் வாட்டர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் அருகே உள்ள எம்.புதூர் பகுதியில் உள்ள அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலையை கேன் வாட்டர் முகவர்கள் முற்றுகையிட்டனர். தங்களுக்கு கேன் வாட்டர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், தட்டுப்பாடு அதிகளவில் நிலவி வருகிறது என கோரிக்கை வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை வேலை நிறுத்தம் காரணமாக குடிநீர் வினியோகம் நடைபெறாது என எடுத்துரைத்தனர்.இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சீல் வைக்கப்படாத ஆலைகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

Related Stories:

>