சரக்கு வாகனம் மோதி 2 வீடுகள் சேதம்

பண்ருட்டி, மார்ச் 1: பண்ருட்டி அருகே சரக்கு வாகனம் மோதி 2 வீடுகள் சேதமடைந்தன. இதில் சரக்கு வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (26). இவர் பொக்லைன் இயந்திரத்துக்கு ஆயில் வாங்குவதற்காக நண்பர் முருகன் (31) என்பவருடன் சரக்கு வாகனத்தில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சரக்கு வாகனத்தை கிருஷ்ணன் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் பண்ருட்டி அருகே உள்ள மணிநகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த நடராஜன், ஆனந்த பத்ப நாபன் ஆகியோரின் வீடுகள் மீது மோதியது. சத்தம் கேட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். இதில் சரக்கு வாகனம் மோதி வீட்டின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது தெரியவந்தது. இந்நிலையில் விபத்து நடந்ததும் கிருஷ்ணன் அங்கிருந்து ஓடிவிட்டார். விபத்தில் முருகன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முருகனை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கிருஷ்ணனை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>