* பெருங்குடியில் அமைகிறது
சென்னை: வெறிநாய்க்கடி, வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெரு நாய்களைப் பராமரிப்பதற்காக பெருங்குடி பகுதியில், மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் கண்ணப்பர் திடல் என கூடுதலாக 5 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர அம்பத்தூர் மண்டலம், 86வது வார்டுக்குட்பட்ட அத்திப்பட்டு, ஆலந்தூர் மண்டலம், 158வது வார்டுக்குட்பட்ட நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலம், 188வது வார்டுக்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், 194வது வார்டுக்குட்பட்ட உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று விரைவில் அனைத்து மையங்களும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, 28 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள், 159 நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 150 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், புதிதாக 15 நாய் பிடிக்கும் வாகனங்கள் மண்டலங்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இதுநாள்வரை 88,240 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 1,47,538 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர் நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் எனும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்கான தனிமைப்படுத்துதல் மையம் பெருங்குடி மண்டலம், 189வது வார்டுக்குட்பட்ட ம.பொ.சி. நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நோயுற்ற 100 தெருநாய்களை பராமரிப்பதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட தெருநாய்களை உடனடியாக மீட்கவும், அவசர மீட்புப் பணிக்கும் 6 சிறப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உடனடி நடவடிக்கைகள் மூலம் ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் நோய் பரவல் தடுக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் நலன் பாதுகாக்கப்படும்.
பொதுமக்களிடமிருந்து தெருநாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் பிரத்யேக புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் இருப்பின் பொதுமக்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், குணப்படுத்த முடியாத நோயுற்ற நாய்கள்,
கடிக்கும் தன்மையுள்ள ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம், 189வது வார்டு ஆகிய 2 இடங்களில் தலா 250 தெருநாய்களை பராமரிப்பதற்காக நாய்கள் காப்பகங்கள் (Dog Shelters) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
