காட்டுமயிலூர், வரக்கால்பட்டில் மயான கொள்ளை திருவிழா

வேப்பூர், மார்ச் 1: வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் காளி வேடமிட்டு மயானத்தில் வேட்டையாடி வலம் வந்து பின்னர் பொங்கலிட்டு கொண்டாடினர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு பகுதியில்  உள்ள சாந்தசூரி காளி பராசக்தி அங்காளம்மனுக்கு 18ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகி பன்னீர்செல்வம் சிறப்பு பூஜைகள் செய்தார். இரவு பம்பை உடுக்கையுடன் பாவாடைராயனுக்கு கும்பம் படையலிட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதி உலா நடந்தது.

Related Stories: